அவன் ஓர் ஏழை! எண்ணற்ற ஏழைகளுக்கிடையில் அவன் ஒருவன்! ஆனால், ஏழைகளில் பலருக்கு ஏற்படாத எண்ணம் அவன் மனத்திலே கொந்தளித்தபடி இருந்து வந்தது. அவன் ஓர் ஏழை! ஆனால் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம், எப்படித் தனது ஏழ்மையைப் போக்கிக் கொள்வது என்பது அல்ல; எப்படி நிம்மதியான வாழ்க்கையைப் பெறுவது என்பது அல்ல; அதைப்பற்றி எண்ணிப் பார்த்திட அவனுக்கு நேரமே இல்லை. எந்த நேரமும் அவன் மனத்திலே கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணம் அக்கிரமம், அநீதி இவற்றைத் தொலைத்தாக வேண்டும் என்பதுதான்! அவன் ஓர் ஏழை! ஆனால் நல்ல உடற்கட்டு, துணிவு; தனக்கென்று எதையும் தேடிப் பெற்றாகவேண்டும் என்ற நினைப்பற்ற நெஞ்சம், வாழ்க்கை நடத்த எதையாவது செய்தாக வேண்டுமே என்ற எண்ணம்கூட அல்ல; வாழ்க்கையிலே ஏன் இத்தனை வஞ்சகமும் அநீதியும் நெளிகின்றன என்ற கேள்வியே அவன் மனத்தைக் குடைந்து கொண்டிருந்தது. அவன் ஏழை! ஆனால் மற்ற ஏழைகள் மனத்திலே மூண்டிடாத கேள்வி குடையும் மனத்தினன்; மற்ற ஏழைகளுக்கு இந்தக் கேள்வி தோன்றியிருந்திருக்கலாம் - பல சந்தர்ப்பங்களில். ஆனால் அவர்கள் அந்தக் கேள்விக்கான விடை கண்டிடத் தம்மால் ஆகாது என்று விட்டு விட்டனர்; தமது வாழ்வுக்கு வழிதேடிக்கொள்ள முனைந்தனர்; மும்முரமாயினர். பிறகு அவர்களுக்கு வேறு எண்ணம் எழவில்லை. இயல்பு அதற்கு இடம் கொடுக்கவில்லை. அவன் ஓர் ஏழை - மற்ற பல ஏழைகளைப் போலவே உழைத்து உண்டு, உலவி உறங்கியும் வந்தான். ஆனால் அதுதான் வாழ்க்கை என்று திருப்தி பெறவில்லை. அவன் உலகிலேயே காணக்கிடக்கும் கேடுகளை ஒழித்தாக வேண்டுமே, என்னவழி அதற்கு, என்று எண்ணி எண்ணி மனத்தை எரிமலையாக்கிக் கொண்டான்.
Bitte wählen Sie Ihr Anliegen aus.
Rechnungen
Retourenschein anfordern
Bestellstatus
Storno







